தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி தனது தேர்தல் வியூகத்தை அதிரடியாகத் தொடங்கியுள்ளது. நாளை திருச்சியில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட மாநாட்டில், தமிழகத்தின் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரே மேடையில் அறிமுகம் செய்து வைக்கிறார்.

2016-ஆம் ஆண்டு முதல் தமிழக அரசியல் களத்தில் முக்கிய சக்தியாக உருவெடுத்து வரும் நாம் தமிழர் கட்சி, எந்தக் கூட்டணியும் இன்றித் தனித்தே களம் கண்டு வருகிறது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் “தனித்துப் போட்டி” என்கிற தனது கொள்கையில் உறுதியாக இருப்பதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்கு சதவீத வளர்ச்சி அரசியல் வட்டாரங்களில் உற்று நோக்கப்படுகிறதுஇந்தத் தொடர் வளர்ச்சியால் உற்சாகமடைந்துள்ள அக்கட்சியினர், வரும் தேர்தலில் இரட்டை இலக்க வாக்கு சதவீதத்தை எட்டும் நோக்கில் தீவிரப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாளை திருச்சியில் நடைபெறவுள்ள மாநாடு அக்கட்சியின் வரலாற்றில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதில் “ஆணுக்கும் பெண்ணுக்கும் சரிபாதி வாய்ப்பு” என்ற அடிப்படையில் 117 பெண் வேட்பாளர்கள், 117 ஆண் வேட்பாளர்கள் என மொத்தம் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.

தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே, அனைத்துத் தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவிப்பதன் மூலம் தேர்தல் பணிகளில் மற்ற கட்சிகளை விட ஒரு படி முந்த சீமான் திட்டமிட்டுள்ளார்.

மேலும் இந்த மாநாட்டிற்காக திருச்சியில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் இதில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.