ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் மங்களகிரியில் உள்ள குடியிருப்பு வளாகத்தில், தொலைக்காட்சியின் சத்தத்தைக் குறைக்கச் சொன்ன கணவனை மனைவியே கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவர் அஹ்மத் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும் கடந்த வியாழக்கிழமை இரவு, அஹ்மத் தனது மனைவியிடம் டிவியின் சத்தத்தைக் குறைக்குமாறு கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட சிறு வாக்குவாதம், ஒரு கட்டத்தில் முற்றி கைகலப்பாக மாறியது. அப்போது ஆத்திரமடைந்த மனைவி கிராந்தி, சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து அஹ்மத்தை சரமாரியாக குத்தியுள்ளார்.
இதனால் படுகாயமடைந்த அஹ்மத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். காதல் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதியினர் கடந்த ஓராண்டாக இப்பகுதியில் வசித்து வந்த நிலையில், சமீபகாலமாக இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள மங்களகிரி போலீசார், மனைவியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு நிமிடம் ஏற்பட்ட ஆத்திரத்தால் ஒரு உயிர் பறிபோனதுடன், ஒரு குடும்பமே சிதைந்து போனது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
