நாடு முழுவதும் ‘பாபர் மசூதி’ என்ற பெயரில் மசூதிகள் கட்டவோ அல்லது இருக்கும் மசூதிகளுக்கு அந்தப் பெயரைச் சூட்டவோ தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது. இந்த மனுவில் எந்தவிதமான அடிப்படை முகாந்திரமோ அல்லது நியாயமான காரணமோ இல்லை என்று சுட்டிக்காட்டிய நீதிபதிகள், தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கும் வகையில் இது போன்ற மனுக்களைத் தாக்கல் செய்யக் கூடாது என்று அதிருப்தி தெரிவித்தனர்.
அயோத்தி வழக்கில் ஏற்கனவே தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது மீண்டும் மசூதிகளின் பெயரை மாற்றக் கோருவது மதநல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் செயல் எனப் பல தரப்பிலிருந்தும் கருத்துகள் எழுந்துள்ளன. எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் சட்டத்தின் முன் இதுபோன்ற கோரிக்கைகளை வைப்பது நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் செயல் என்றும், இதுபோன்ற மனுக்களைத் தாக்கல் செய்தவர்களுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
