தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே இன்று (வெள்ளிக்கிழமை) நிகழ்ந்தசாலை விபத்தில் தனியார் பேருந்து கார் மீது மோதி கவிழ்ந்ததில் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
டி.பொம்மிநாயக்கன்பட்டியிலிருந்து போடி நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்து, எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற கார் மீது மோதி நிலைதடுமாறி சாலையில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் காரில் இருந்தவர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து ஆண்டிபட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
