இந்தியாவிடம் பாகிஸ்தான் அணி தொடர்ந்து தோல்வியடைந்து வருவது அந்த நாட்டு முன்னாள் வீரர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 2017-ம் ஆண்டிற்குப் பிறகு இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வெறும் மூன்று முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இந்தச் சரிவுக்குப் பிசிபி-யில் நிலவும் அரசியல் மற்றும் பயிற்சியாளர்களைக் கையாளும் விதம் போன்ற பல காரணங்கள் இருந்தாலும், 2021 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பிறகு வீரர்களிடம் குடியேறிய ‘தலைக்கனம்’ தான் முக்கியக் காரணம் என்று முன்னாள் வீரர் முகமது யூசுப் சாடியுள்ளார்.

அந்த வெற்றிக்குப் பிறகு வீரர்கள் பயிற்சியாளர்களுக்கு மதிப்பளிப்பதில்லை என்றும், தங்களை விட சிறந்தவர்கள் யாரும் இல்லை என்ற மமதையில் செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கிடையில், முன்னாள் வீரர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்த ஷதாப் கான், இந்தியாவை உலகக் கோப்பையில் வீழ்த்திய ஒரே அணி தங்களுடையது தான் என்றும், விமர்சனம் செய்யும் முன்னாள் வீரர்கள் யாரும் உலகக் கோப்பையில் இந்தியாவை வென்றதில்லை என்றும் ஆணவத்துடன் பேசியது யூசுப்பின் கருத்தை உறுதிப்படுத்தும் விதமாக உள்ளது.

மேலும், பாபர் அசாமின் பேட்டிங் நுட்பம் சீர்குலைந்துள்ளதாகவும், ஃபார்மில் இல்லாத அவரை அணியிலிருந்து நீக்க தான் பரிந்துரை செய்தபோது வாரியம் அதற்கு முட்டுக்கட்டை போட்டதாலேயே தான் பதவிய விலகியதாகவும் யூசுப் தெரிவித்துள்ளார். தகுந்த நேரத்தில் கடினமான முடிவுகளை எடுக்காததே பாகிஸ்தான் கிரிக்கெட்டின் இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என்பது அவரது கருத்தாக உள்ளது.