பாகிஸ்தான் ஹாக்கி அணியின் கேப்டன் அமாத் ஷகீல் பட்டுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இந்த விவகாரத்தைத் தொடர்ந்து பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனத் தலைவரும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள சம்பவம் விளையாட்டு உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ‘புரோ ஹாக்கி லீக்’ தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்றது. அங்கு ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனி அணிகளுக்கு எதிராக விளையாடிய 4 போட்டிகளிலும் பாகிஸ்தான் படுதோல்வியைச் சந்தித்தது. தொடர் முடிந்து தாயகம் திரும்பிய அணியின் கேப்டன் அமாத் ஷகீல் பட், பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம் (PHF) மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார். அவர் கூறியதாவது,
ஆஸ்திரேலியாவில் நாங்கள் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்தோம். தங்கும் விடுதிக்கு சம்மேளனம் முன்கூட்டியே பணம் செலுத்தாததால், நள்ளிரவில் ஒரு மணி நேரம் சாலையிலேயே காத்திருந்தோம். தங்கிய இடத்திலும் போதிய வசதிகள் இல்லை. நாங்களே சமையலறையைச் சுத்தம் செய்து, பாத்திரங்களையும், துணிகளையும் துவைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். இவ்வளவு மன உளைச்சலில் எப்படி போட்டியில் கவனம் செலுத்த முடியும்?”
மேலும், வீரர்களுக்கு கடந்த ஓராண்டாக தினசரி படி வழங்கப்படவில்லை என்றும், தற்போதைய ஹாக்கி நிர்வாகத்தை முற்றிலும் கலைக்க வேண்டும் என்றும் அவர் ஆவேசமாகத் தெரிவித்தார். இந்தக் குற்றச்சாட்டுகள் பாகிஸ்தான் ஹாக்கிக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தியதாகக் கூறி, கேப்டன் அமாத் ஷகீல் பட்டுக்கு 2 ஆண்டுகள் விளையாட தடை விதித்து பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனத் தலைவர் தாரிக் புக்தி உத்தரவிட்டுள்ளார்.
தடை உத்தரவைப் பிறப்பித்த கையோடு, தாரிக் புக்தி தனது பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை சம்மேளனத்தின் தலைமைப் புரவலரான பிரதமர் ஷபாஸ் ஷெரிப்புக்கு அவர் அனுப்பியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: ஆஸ்திரேலிய பயணத்திற்கான முழு ஏற்பாடுகளையும் ‘பாகிஸ்தான் விளையாட்டு வாரியம்’ தான் செய்தது. அங்கு ஏற்பட்ட குளறுபடிகளுக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பாகிஸ்தான் ஹாக்கி நிர்வாகத்தில் நிலவும் இந்த மோதல் போக்கு, அந்நாட்டு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
