இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் 2026 டி20 உலகக் கோப்பைத் தொடரில், பாதுகாப்பு காரணங்களைக் கூறி இந்தியாவுக்கு வர மறுத்த வங்கதேச அணி தொடரிலிருந்து நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டது.

இந்த அதிரடி முடிவின் பின்னணியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) தலைவர் மொஹ்சின் நக்வியின் தூண்டுதல் இருக்கலாம் என ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் முன்னாள் சி.இ.ஓ சையத் அஷ்ரபுல் ஹக் குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தான் விரித்த வலையில் வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் அமினுல் இஸ்லாம் விழுந்துவிட்டதாகவும், சர்வதேச கிரிக்கெட் ராஜதந்திரம் புரியாமல் அவர் எடுத்த முதிர்ச்சியற்ற முடிவால் லிட்டன் தாஸ், முஸ்தாபிசுர் ரஹ்மான் போன்ற மூத்த வீரர்களின் உலகக் கோப்பை கனவு சிதைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் முஸ்தாபிசுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்ட விவகாரத்தைப் பெரிதுபடுத்தி, ஒட்டுமொத்த அணியின் பாதுகாப்பையும் கேள்விக்குள்ளாக்கியது தேவையற்றது என்று சுட்டிக்காட்டியுள்ள ஹக், இது வங்கதேச கிரிக்கெட் ரசிகர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று சாடியுள்ளார்.

ஐசிசி மற்றும் பிசிசிஐ பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தும், பாகிஸ்தானின் ‘புறக்கணிப்பு நாடகத்திற்கு’ ஆதரவாக வங்கதேசம் பிடிவாதம் பிடித்தது அந்த நாட்டு கிரிக்கெட்டைப் பத்தாண்டுகள் பின்னோக்கித் தள்ளும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

அரசியல் லாபத்திற்காகத் தனது நாட்டின் மிகப்பெரிய சொத்துகளான வீரர்களைப் பாதுகாப்பதில் வாரியம் தவறிவிட்டதாகவும், இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் வங்கதேசம் ஒரு ‘பிரச்சனைக்குரிய நாடாக’ப் பார்க்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாகவும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.