தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. திமுக தரப்பில் விருப்ப மனு வாங்கும் பணிகள் இப்போதுதான் ஆரம்பமாகியுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு படி மேலே சென்று, விருப்ப மனுக்களைப் பெற்று நேர்காணலையும் விறுவிறுப்பாக நடத்தி முடித்துள்ளார்.
தற்போது தமிழக அரசியலில் அதிமுக தலைமையிலான ஒரு கூட்டணியும், திமுக-காங்கிரஸ்-தேமுதிக அடங்கிய மற்றொரு கூட்டணியும் மோதுகின்றன. இவர்களுடன் சீமானின் நாம் தமிழர் மற்றும் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவுவதால் தேர்தல் களம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், வரும் பிப்ரவரி 24-ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு இன்னும் முழுமையாக முடிவடையவில்லை என்றாலும், அதிமுக போட்டியிடுவது உறுதி செய்யப்பட்ட தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அன்றைய தினம் அவர் அறிவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற கட்சிகளை விட தேர்தல் பணிகளில் அதிமுக காட்டும் இந்த வேகம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
