டெல்லியில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் பிரேசில் அதிபர் லூலா டி சில்வா போன்ற உலகத் தலைவர்கள் பங்கேற்ற உயர்மட்ட ‘AI இம்பாக்ட்’ உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த சர்வதேச அரங்கில் கேலட்டியாஸ் பல்கலைக்கழகம் (Galgotias University) காட்சிப்படுத்திய ட்ரோன் மாடல் இணையதளங்களில் கடும் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. அந்த ட்ரோன் பார்ப்பதற்கு மிகவும் சாதாரணமாக, தெர்மாகோல் கொண்டு செய்யப்பட்டு, பிளாஸ்டிக் கவரால் சுற்றப்பட்டு, ரப்பர் பேண்டுகளால் கட்டப்பட்டிருந்தது. நான்காம் வகுப்பு படிக்கும் பள்ளிச் சிறுவர்கள் செய்யும் புராஜெக்ட் போல இருக்கும் இதனை ஒரு சர்வதேச மாநாட்டில் வைத்தது இந்தியாவின் கல்வித் தரத்தையே கேலிக்குள்ளாக்குவதாக நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர்.
My dudes at Galgotia literally brought a thermocol made Drone in an international AI summit 😭
Cancel this university’s UGC accreditation man , they are ruining lives of its students.
pic.twitter.com/9YNggvQWYT— Roshan Rai (@RoshanKrRaii) February 18, 2026
முன்னதாக, இதே பல்கலைக்கழகம் தனது அரங்கில் ஒரு ரோபோ நாயைக் காட்சிப்படுத்தியிருந்தது. ஆனால் அது இவர்கள் தயாரித்தது அல்ல, மாறாக சீனாவிலிருந்து வாங்கப்பட்டத் தயாரிப்பு என்பதைச் சமூக வலைதளவாசிகள் கண்டுபிடித்து ஆதாரத்துடன் பதிவிட்டனர். இதனால் ஏற்கனவே அந்தப் பல்கலைக்கழகம் விமர்சனங்களைச் சந்தித்த நிலையில், இந்தத் தெர்மாகோல் ட்ரோன் விவகாரம் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது போலானது. இந்த அடுத்தடுத்த சர்ச்சைகளால், அந்தப் பல்கலைக்கழகத்தின் யுஜிசி (UGC) அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதன் விளைவாக, மாநாட்டின் அரங்கிலிருந்து பல்கலைக்கழகத்தின் ஸ்டால் உடனடியாக அகற்றப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
