பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரண் மாவட்டம் சக்கியா பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பஞ்சாயத்து செயலாளர் பால்கிஷுன் ராம் என்பவர், மறைந்த தனது மனைவி சாரதா தேவியின் நினைவாக 65 லட்சம் ரூபாய் செலவில் 65 அடி உயரத்தில் ஒரு கோவிலைக் கட்டி அதில் அவரது சிலையை நிறுவியுள்ளார்.

கடந்த 2022 ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்த தனது மனைவியை தெய்வமாக கருதும் இவர், தனது பணி ஓய்வுக் காலத்தில் கிடைத்த மொத்தப் பணத்தையும் இந்த நினைவாலயத்திற்காகச் செலவிட்டுள்ளார். தினமும் காலையில் சிலைக்குப் பூச்சூடி குங்குமம் இட்டு வழிபாடு செய்யும் பால்கிஷுன், தனது மனைவிக்கு மிகவும் பிடித்தமான தேநீர் மற்றும் உணவுகளைச் சிலைக்கு முன்னால் படைத்துத் தனது ஆழ்ந்த அன்பை வெளிப்படுத்தி வருகிறார்.

பால்கிஷுன் ராமின் இந்தச் செயல் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவயதிலேயே தந்தையை இழந்த பால்கிஷுன் வறுமையால் படிப்பைக் கைவிட முயன்றபோது, அவரது மனைவி சாரதா தேவி தனது நகைகளை விற்று அவரை படிக்க வைத்ததுடன் கூலி வேலை செய்து குடும்பத்தையும் கவனித்துக் கொண்டுள்ளார்.

மனைவியின் தியாகத்தாலேயே தான் அரசு அதிகாரியாக உயர்ந்ததாகக் கூறும் பால்கிஷுன், அந்த நன்றிக்கடனாகவே இந்தக் கோவிலைக் கட்டியதாகக் கூறுகிறார். காதலர் தினத்தை உலகம் கொண்டாடிக்கொண்டிருக்கும் வேளையில், மனைவியின் இறப்பிற்குப் பின்னரும் அவர் மீது மாறாத அன்பு செலுத்தும் இவரைச் சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.