தமிழக சட்டப்பேரவையின் 2026-2027-ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்கிறார். இதற்கிடையே, பட்ஜெட் என்ற பெயரில் அரசு மக்களுக்கு ‘காது குத்துவதாக’ எதிர்க்கட்சியான அ.தி.மு.க. வினோதமான முறையில் விமர்சித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்கு கூடியுள்ளது. இந்த ஆண்டின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றுகிறார். நவீன தொழில்நுட்பத்தைப் பின்பற்றி, இந்த முறையும் ‘காகிதம் இல்லா பட்ஜெட்’ முறையாகவே இது தாக்கல் செய்யப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, வரும் பிப்ரவரி 20-ஆம் தேதி நடப்பு நிதியாண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கைகளும், 2025-2026-ஆம் ஆண்டின் கூடுதல் செலவினங்களுக்கான இறுதி மானியக் கோரிக்கைகளும் அவையில் முன்வைக்கப்பட உள்ளன.
இந்த நிலையில் இடைக்கால பட்ஜெட் குறித்து பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. காரசாரமான விமர்சனத்தை முன்வைத்துள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அ.தி.மு.க.வின் ‘அழைப்பிதழ்’ பாணியிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“கடந்த நாலரை ஆண்டுகளாக பட்ஜெட் என்ற பெயரில் தமிழக மக்களுக்கு நடத்தப்படும் மாபெரும் காது குத்தும் விழா, இந்த ஆண்டும் பிப்ரவரி 17-ஆம் தேதி காலை 10 மணி அளவில் சட்டமன்றத்தில் விமரிசையாக நடைபெற உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முன்னின்று மக்களுக்கு காது குத்துவார்.”
மேலும், அந்த அறிக்கையில் கூவம் சுத்திகரிப்பு, மழைநீர் வடிகால் திட்டம், சிங்காரச் சென்னை போன்ற திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதாகக் கூறி மக்களை அரசு ஏமாற்றுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அரசின் வரி உயர்வைக் கிண்டல் செய்யும் விதமாக, “பொதுமக்கள் சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி மற்றும் மின் கட்டணம் போன்ற பல்வேறு வடிவங்களில் மொய் வைக்கலாம்” என்றும் அ.தி.மு.க. அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
பட்ஜெட் தாக்கலையொட்டி தமிழக அரசியல் களம் இன்று பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது.
