ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள சுந்தர்படா பகுதியில் கடந்த ஜனவரி 27-ம் தேதி வீட்டின் மாடியில் நிகழ்ந்த சக்திவாய்ந்த வெடிவிபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டதும் வானத்தை நோக்கி கரும்புகை எழும்புவதும், அங்கிருந்த பெண்கள் அலறியடித்துக் கொண்டு உயிருக்கு பயந்து ஓடுவதும் பதிவாகியுள்ளது.

இந்த கோர விபத்தில் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஒரு பெண்ணும் அவரது மகனும் உயிரிழந்தனர். சட்டவிரோதமாக வெடிகுண்டுகள் தயாரித்தபோது இந்த விபத்து நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவ இடத்தில் இருந்து வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, ஷாநவாஸ் மாலிக் என்பவர் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தின் பின்னணியில் ஏதேனும் சதித்திட்டம் உள்ளதா என்பதைக் கண்டறிய, தற்போது தேசிய புலனாய்வு முகமை (NIA) இந்த வழக்கைக் கையில் எடுத்துத் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.