திமுக – காங்கிரஸ் கூட்டணியில் “ஆட்சியில் பங்கு” என்ற விவகாரம் புகைந்து கொண்டிருக்கும் நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது சொந்த கட்சி நிர்வாகிகளையே கடுமையாக சாடியுள்ளார். “ஆட்சியில் பங்கு வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியது எனக்கே தெரியாது” என கூறிய அவர், ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கேவை விட மாணிக்கம் தாகூரும், பிரவீன் சக்ரவர்த்தியும் பெரிய ஆட்களா? என நக்கல் தொனியில் கேள்வி எழுப்பியது சத்தியமூர்த்தி பவனில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
”கூட்டணி பற்றி அறைக்குள் வைத்து பேச வேண்டியவற்றை இப்படி பொதுவெளியில் பேசக்கூடாது” என எச்சரித்த செல்வப்பெருந்தகை, இவ்வளவு நாட்கள் அமைதியாக இருந்துவிட்டு சரியாக தேர்தல் நேரத்தில் மட்டும் இப்படி முரண்பாடான கருத்துக்களை பேசுவது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். கூட்டணிக்குள் குழப்பத்தை விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்களுக்கு அவர் விடுத்த இந்த மறைமுக எச்சரிக்கை, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
