கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் செருபுழா பகுதியைச் சேர்ந்த பிரபல விவசாயி அம்பத்து இலியாஸ் கடன் சுமை காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 62 வயதான இவர், கடந்த 40 ஆண்டுகளாகத் தனது சொந்த நிலம் மற்றும் குத்தகை நிலங்களில் காய்கறிகள் மற்றும் வாழை பயிரிட்டு வந்தார்.

விவசாயத் துறையில் இவருடைய அர்ப்பணிப்பைப் பாராட்டி கேரள அரசு இவருக்குச் சிறந்த காய்கறி விவசாயிக்கான முதலமைச்சர் விருதை வழங்கி கௌரவித்துள்ளது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக விளைச்சல் பற்றாக்குறை மற்றும் போதிய விலை கிடைக்காத காரணத்தால், லட்சக்கணக்கில் கடன் ஏற்பட்டு கடும் நிதி நெருக்கடியில் இலியாஸ் சிக்கித் தவித்துள்ளார்.

மன உளைச்சலில் இருந்த இலியாஸ், தனது பண்ணை நிலத்தில் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்த வருடம் சுமார் 250  வாழைக்கன்றுகளை நட்டுப் பராமரித்து வந்த நிலையில், அரசு வழங்க வேண்டிய மானியத் தொகையான 1 லட்சத்து 15000 ரூபாய் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகே வழங்கப்பட்டதாக உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மாநில விருதினைப் பெற்ற ஒரு முன்னோடி விவசாயி, பொருளாதார நெருக்கடியால் உயிரிழந்திருப்பது கேரள விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.