ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்ததைத் தாங்கிக் கொள்ள முடியாமல், அந்நாட்டு கிரிக்கெட் வாரியத் (PCB) தலைவர் மோசின் நக்வி போட்டி முடிவதற்கு முன்பே மைதானத்தை விட்டு வெளியேறினார்.

கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், இந்திய அணி நிர்ணயித்த 176 ரன்கள் என்ற இலக்கை நோக்கிப் பயணித்த பாகிஸ்தான், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. குறிப்பாக, 12-வது ஓவரில் முகமது நவாஸ் ஆட்டமிழந்தபோது பாகிஸ்தான் அணி 77 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் இருந்தது.

தனது அணி இந்தியாவிடம் மீண்டும் ஒருமுறை அவமானப்படுவதைக் காண விரும்பாத மோசின் நக்வி, போட்டி முடிவதற்கு முன்பே தனது கருப்பு நிற காரில் பலத்த பாதுகாப்புடன் மைதானத்திலிருந்து ரகசியமாக வெளியேறினார். ஆசியக் கோப்பையைப் போலவே இந்தப் போட்டியிலும் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

 

வங்கதேச தொடரை சாக்குவைத்து இந்திய-பாகிஸ்தான் போட்டியைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகளை கிளப்பிய நக்வி, இப்போது தோல்வி பயத்தில் ஓட்டம் பிடித்தது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. “தங்கள் அணியின் தோல்வியைக் கூட நேரில் பார்க்கத் துணிவில்லாதவர்” என ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.

மோசின் நக்வி பிசிபி மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் பொறுப்புகளை ஏற்றது முதல், இந்திய ரசிகர்களுடன் அவருக்கு சுமுகமான உறவு இருந்ததில்லை. கடந்த ஆண்டு ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியின் போது, இந்திய வீரர்கள் அவரிடமிருந்து கோப்பையைப் பெற மறுத்ததால், கோப்பையை எடுத்துக் கொண்டு மைதானத்தை விட்டு வெளியேறிய நக்வி, இன்றுவரை அதைத் திருப்பித் தரவில்லை என்ற சர்ச்சையும் அவர் மீது உள்ளது.

மேலும் இந்தியாவிற்கு எதிரான இந்தப் படுதோல்வி, பாகிஸ்தான் கேப்டனின் தவறான முடிவுகளையும், அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகத்தின் மெத்தனப் போக்கையும் மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தியுள்ளது.