ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரில், பரம எதிரியான பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அதிகாரப்பூர்வமாக ‘சூப்பர் 8’ சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. பிப்ரவரி 15-ம் தேதி நடைபெற்ற விறுவிறுப்பான இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷனின் அதிரடியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன் 40 பந்துகளில் 77 ரன்கள் விளாசினார். அவருக்கு உறுதுணையாக சூர்யகுமார் யாதவ் 32 ரன்கள் சேர்த்தார்.
176 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி, இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. 18 ஓவர்களிலேயே அந்த அணி 114 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி வாகை சூடியது. இந்த அதிர்ச்சித் தோல்விக்குப் பிறகு பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“இன்று எங்கள் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான நாளாக அமையவில்லை. திட்டமிட்டபடி அவர்களால் பந்துவீச முடியவில்லை. இருப்பினும், கடந்த 6 மாதங்களாக அவர்கள் சிறப்பாகச் செயல்பட்டுள்ளதால் அவர்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது.”
“பேட்டிங்கின் போது ஆரம்பத்திலேயே (பவர்பிளே) அதிக விக்கெட்டுகளை இழந்தது எங்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது. முதல் இன்னிங்ஸில் ஆடுகளம் சற்று மந்தமாக இருந்தது, ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கிற்குச் சாதகமாக மாறியும் எங்களால் அதைப் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை.”
இந்தியா – பாகிஸ்தான் போட்டிகளில் உணர்ச்சிகள் எப்போதும் உச்சத்தில் இருக்கும். அந்த அழுத்தத்தைக் கையாள்வது மிக முக்கியம். எங்களது அடுத்த போட்டியில் வெற்றி பெற்று எப்படியாவது ‘சூப்பர் 8’ சுற்றுக்கு நுழைய முயற்சிப்போம் என்றார். மேலும் இந்தத் தோல்வியால் பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவதில் தற்போது சிக்கல் நீடிக்கிறது. அடுத்த போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி உள்ளது.
