தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட 10 தொகுதிகளைக் கேட்டுள்ளதாகவும், இடங்கள் ஒதுக்கப்படாவிட்டால் 51 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாகவும் இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை அதிமுக – பாஜக கட்சிகள் ஓரணியில் நின்று எதிர்கொள்கின்றன. இந்த மெகா கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக, அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக மற்றும் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஏற்கனவே இடம்பிடித்துள்ளன.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, தொகுதிப் பங்கீடு குறித்துத் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார். அவர் கூறுகையில், தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் நாங்கள் 10 தொகுதிகளைக் கேட்டுள்ளோம். ஒருவேளை எங்களுக்கு உரிய இடங்கள் ஒதுக்கப்படாவிட்டால், எங்கள் கட்சி சார்பில் 51 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவோம்.”

தொடர்ந்து பேசிய அவர், “நாங்கள் தனித்துப் போட்டியிடும் தொகுதிகளைத் தவிர்த்து, மற்ற தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) வெற்றிக்கு எங்களது ஆதரவு தொடரும்” என்றும் குறிப்பிட்டார்.

அதிமுக கூட்டணியில் ஏற்கனவே பாமக, அமமுக போன்ற பெரிய கட்சிகள் இருப்பதால், ராம்தாஸ் அத்வாலேவின் இந்த 10 தொகுதிகள் கோரிக்கை கூட்டணிப் பேச்சுவார்த்தையில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.