டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறவுள்ள இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஹை-வோல்டேஜ் போட்டி மழையினால் பாதிக்கப்படுமா என்ற கவலை ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலியின் கருத்து சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி பேசுகையில், “அல்லாஹ்விடம் நான் மழை பெய்ய வேண்டும் என்றுதான் வேண்டிக்கொள்கிறேன். போட்டி நடக்காமல் இரு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பகிர்ந்து கொள்வதே சிறந்தது” எனத் தெரிவித்தார்.

“தோல்வி பயத்தினால் இப்படிச் சொல்கிறீர்களா?” என்ற கேள்விக்கு, “பயம் கிடையாது, ஆனால் போட்டி நடக்காமல் இருப்பதே நல்லது” என அவர் பதிலளித்தார். அவரது இந்த ‘வித்தியாசமான’ கருத்துக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், “பாசித் அலிக்கு வயதாகிவிட்டது, அவர் வீட்டில் ஓய்வெடுப்பதே நல்லது” என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

அதே விவாதத்தில் பங்கேற்ற பத்திரிகையாளர் ஷாஹித் அக்தர் ஹாஷ்மி நகைச்சுவையாகப் பேசுகையில், “ஐசிசி தொடர்களில் இதுவரை இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் மழையினால் ரத்தானதாக சரித்திரமே இல்லை. 2022-ல் மெல்போர்னில் மழை வரும் என்றார்கள், ஆனால் போட்டி நடந்து நாம் (பாகிஸ்தான்) தோற்றோம். ஒருவேளை நாம் தோற்க வேண்டும் என்பதுதான் இறைவனின் விருப்பமாக இருக்கும் போல” என்றார்.

மேலும், உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியாவின் ஆதிக்கம் குறித்துப் பேசிய அவர், “ஒருநாள் உலகக்கோப்பையில் 0-8 என்ற கணக்கிலும், டி20 தொடர்களில் 1-7 என்ற கணக்கிலும் பாகிஸ்தான் பின்னடைவைச் சந்தித்துள்ளது. எந்தப் போட்டியும் ரத்தாகாமல், ரசிகர்களை ஏமாற்றாமல் இந்தியாவிடம் நாம் தோற்று வருகிறோம்” எனத் தன் நாட்டு அணியின் நிலையைக் கிண்டலாகப் பதிவிட்டார்.

கொழும்பு வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, போட்டி நடக்கும் பகுதியில் இன்று மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை மழைக்கான வாய்ப்பு 49% முதல் 63% வரை உள்ளது. இது டாஸ் போடுவதில் தாமதத்தை ஏற்படுத்தலாம்.

 

 

View this post on Instagram

 

A post shared by ASports (@asportstv.pk)

இருப்பினும், போட்டி தொடங்க வேண்டிய இரவு 7 மணி அளவில் மழைக்கான வாய்ப்பு வெறும் 9 சதவீதமாகக் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆரம்பத்தில் தாமதம் ஏற்பட்டாலும், முழுமையான ஆட்டத்தை ரசிகர்கள் ரசிக்க வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதால், இலங்கையின் வானிலை ஆய்வுத் துறை தொடர்ந்து நிலவரத்தைக் கண்காணித்து வருகிறது.