உலகளவில் சுமார் 300 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ்அப் செயலி, தனது பயனர்களுக்காக ‘வாட்ஸ்அப் வெப்’ தளத்தில் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
தற்போது பள்ளிகள், அலுவலகங்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் தவிர்க்க முடியாத தகவல் பரிமாற்றக் கருவியாக வாட்ஸ்அப் உருவெடுத்துள்ளது. இந்நிலையில், சந்தைப் போட்டியைச் சமாளிக்கவும், பயனர் அனுபவத்தை மேம்படுத்தவும் மெட்டா நிறுவனம் தொடர்ந்து புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது.
இதுவரை மொபைல் செயலி மற்றும் கணினிக்கான பிரத்யேக மென்பொருட்களில் (Windows/Mac App) மட்டுமே இருந்த ஆடியோ மற்றும் வீடியோ அழைப்பு வசதி, இனி பிரவுசர் வழியாகப் பயன்படுத்தப்படும் ‘வாட்ஸ்அப் வெப்’ தளத்திலும் கிடைக்கும்.
இனி விண்டோஸ் அல்லது மேக் இயங்குதளங்களில் தனியாக வாட்ஸ்அப் செயலியைப் பதிவிறக்கம் (Download) செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நேரடியாக இணையதள பிரவுசரிலேயே இந்த அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.
கணினியில் வேலை செய்துகொண்டே மொபைலை எடுக்காமல் அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என்பதால், இது அலுவலகப் பணியாளர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
இந்த புதிய வசதியானது முதற்கட்டமாகச் சில பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் நாட்களில் உலகெங்கிலும் உள்ள அனைத்து வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கும் இந்த அப்டேட் படிப்படியாகக் கிடைக்கும் என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
