முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலம் தற்போது மிகப்பெரிய கேள்விக்குறியாகியுள்ளது. அவரது நம்பிக்கைக்குரிய தளபதிகளாக இருந்த மாவட்ட நிர்வாகிகள் கூட, இப்போது திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் போன்ற கட்சிகளை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். நேற்று தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கருப்பூர் சீனி தனது 200 ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தது, ஓபிஎஸ் அணிக்கு விழுந்த பேரிடியாகப் பார்க்கப்படுகிறது. விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்வு, அந்தப் பகுதியில் ஓபிஎஸ்ஸின் செல்வாக்கு சரிந்ததையே காட்டுகிறது.
தொடர்ச்சியாகத் தனது ஆதரவாளர்களை இழந்து வரும் பன்னீர்செல்வம், தற்போது அரசியல் ரீதியாகத் தனிமைப்படுத்தப்பட்டு வருவது அவரது தீவிர ஆதரவாளர்களுக்கே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. “தலைமை சரியாக இருந்தால் தானே தொண்டர்கள் இருப்பார்கள்” என்ற முணுமுணுப்பு அவர் பக்கமே கேட்கத் தொடங்கியுள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில், தன்னிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச செல்வாக்கையும் தக்கவைக்க ஓபிஎஸ் என்ன செய்யப் போகிறார் என்பது தான் இப்போது தமிழக அரசியலின் ஹாட் டாபிக்.
