ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது திருமணத்தின் போது வரதட்சணையைத் துணிச்சலாக மறுத்து ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். திருமண சடங்குகளின் போது, மணப்பெண்ணின் தந்தை தனது மகளுக்கு வரதட்சணையாக ₹31 லட்சம் ரொக்கப் பணத்தை வழங்க முன்வந்துள்ளார். ஆனால், அந்தப் பணத்தை வாங்க மணமகன் மற்றும் அவரது தந்தை ஆகிய இருவருமே திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.
”உங்கள் மகளை எங்கள் வீட்டுப் பெண்ணாகக் கொடுத்ததே நீங்கள் எங்களுக்குத் தரும் மிகப்பெரிய பரிசு. அதைவிடப் பெரிய செல்வம் எங்களுக்குத் தேவையில்லை” என்று அந்த இளைஞரும் அவரது தந்தையும் பெருந்தன்மையுடன் கூறியுள்ளனர். இருப்பினும், சடங்குகளுக்காக எதாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற பெண்ணின் தந்தையின் கோரிக்கையை ஏற்று, அடையாளத்திற்காக வெறும் ₹1 ரூபாய் மற்றும் ஒரு தேங்காயை மட்டும் பெற்றுக்கொண்டு திருமணத்தை இனிதே முடித்துள்ளனர்.
பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பெண்ணின் கண்ணியத்தை மதித்த இந்த இளைஞரின் செயலைப் பார்த்து திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் நெகிழ்ந்து போயினர். சமூக வலைதளங்களில் இந்தச் செய்தி தற்போது ‘ட்ரெண்டிங்’ ஆகி வருகிறது.
