காரைக்காலில் நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, புதுச்சேரியின் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு ஊழலில் திளைத்ததாகக் கடுமையாகச் சாடினார். மத்திய அரசு புதுச்சேரியின் வளர்ச்சிக்காக அனுப்பிய நிதியை அப்போதைய முதல்வர் நாராயணசாமி முறையாகப் பயன்படுத்தாமல், காந்தி குடும்பத்தின் சேவைக்காக டெல்லிக்கு அனுப்பி வைத்ததாக அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், புதுச்சேரி மக்கள் ஊழலற்ற மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை விரும்புகிறார்கள் என்றும், அதற்குப் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மட்டுமே தீர்வாக அமையும் என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார். புதுச்சேரி மாநிலத்தின் உள்கட்டமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு குறித்துப் பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையால் மட்டுமே புதுச்சேரி ‘பெஸ்ட் மாநிலமாக மாற முடியும் என்றார்.

இந்நிலையில் காங்கிரஸ் ஆட்சியில் நிலவிய நிர்வாகச் சீர்கேடுகள் மாநிலத்தின் வளர்ச்சியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். ஊழல் புகார்கள் மற்றும் நிர்வாகத் தடையால் பாதிக்கப்பட்டிருந்த புதுச்சேரியை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல இரட்டை இயந்திர அரசு அவசியம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.