தமிழகத்தில் நிலவி வரும் தற்போதைய சூழல் குறித்துத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். திமுக ஆட்சியில் தமிழகம் ஒரு “போராட்ட மாநிலமாக” மாறிவிட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தரப்பு மக்கள் வீதியில் இறங்கிப் போராடும் அவலநிலை நீடிப்பதாகச் சுட்டிக்காட்டினார்.
”ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எனப் பல தரப்பட்ட மக்கள் தங்கள் அடிப்படை உரிமைகளுக்காகத் தினமும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக ஆட்சியில் தமிழக மக்களின் அன்றாட வாழ்க்கை என்பதே ஒரு போராட்டமாகத்தான் இருக்கிறது” என்று விஜய் வேதனையுடன் குறிப்பிட்டார். மக்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காமல் அரசு மெத்தனமாக இருப்பதாகவும், ஒட்டுமொத்த நிர்வாகமும் முடங்கியுள்ளதாகவும் அவர் தனது உரையில் அனல் பறக்கப் பேசியுள்ளார்.
