அமெரிக்காவில் 13 ஆண்டுகள் வாழ்ந்த இந்தியக் குடும்பம் ஒன்று, தாய்நாட்டின் மீதுள்ள பற்று மற்றும் உறவுகளுடன் வாழ வேண்டும் என்ற ஆசையில் மும்பைக்குக் குடிபெயர்ந்தது. ஆனால், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அமெரிக்காவிற்கே திரும்ப முடிவு செய்துள்ள அந்தத் தம்பதி, அதற்குப் பின்னால் உள்ள கசப்பான எதார்த்தங்களை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளனர்.
இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் உணவு தங்களுக்குப் பிடித்திருந்தாலும், தினசரி வாழ்க்கையில் அவர்கள் எதிர்கொண்ட போக்குவரத்து நெரிசல், அதிகப்படியான மக்கள் நடமாட்டம் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவை பெரும் சவாலாக இருந்தன. குறிப்பாக, மும்பையின் வேகமான வாழ்க்கையோடும், அடிப்படை வசதிகளுக்காகப் போராட வேண்டிய சூழலோடும் தங்களை முழுமையாகப் பொருத்திக்கொள்ள முடியவில்லை என்று அவர்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.
மேலும், மும்பையில் தங்கியிருந்த ஐந்து ஆண்டுகளில் ‘யதார்த்தம் எங்களை மிகக் கடுமையாகத் தாக்கியது’ என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள். குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கு அமெரிக்காவே சிறந்த இடமாக இருக்கும் என்று அவர்கள் கருதுகின்றனர். இந்தியாவில் நிலவும் அதிகப்படியான போட்டி மற்றும் எந்நேரமும் ஓடிக்கொண்டிருக்க வேண்டிய மன அழுத்தம் ஆகியவை அவர்களின் நிம்மதியைப் பாதித்துள்ளன.
இந்நிலையில் வசதியான வாழ்க்கை இருந்தபோதிலும், தரமான வாழ்வாதாரமும் அமைதியான சூழலும் கிடைக்காததால், இறுதியில் கனத்த இதயத்துடன் இந்தியாவை விட்டு வெளியேறி மீண்டும் அமெரிக்காவில் குடியேற முடிவெடுத்ததாக அந்தத் தம்பதி விளக்கியுள்ளனர். இது வெளிநாடுகளில் வாழும் பல இந்தியர்களிடையே ஒரு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
