மத்திய பட்ஜெட் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தின் கடன் சுமை குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சியில் கடன் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதனை உறுதிப்படுத்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சை மேற்கோள் காட்டினார்.
இதற்குப் பதிலடி கொடுத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டைப் பற்றிப் பேசாமல் தமிழக பட்ஜெட் மற்றும் அரசியல் குறித்துப் பேசுவது முறையல்ல என்று காரசாரமாகக் குற்றம் சாட்டினார்.
தமிழகத்தில் தேர்தல் வரவிருப்பதைக் கணக்கில் கொண்டே நிர்மலா சீதாராமன் திட்டமிட்டு எடப்பாடி பழனிசாமியின் பேச்சை இங்கே குறிப்பிடுகிறார் என்றும், இதற்கும் மத்திய பட்ஜெட் விவாதத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் கார்கே கண்டனம் தெரிவித்தார்.
இதனால் ராஜ்யசபாவில் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுப் பரபரப்பு நிலவியது. தமிழக அரசு மீதான விமர்சனம் மற்றும் அதற்கு காங்கிரஸ் தெரிவித்த எதிர்ப்பு ஆகியவை டெல்லி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
