திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக நிறைவடைந்த நிலையில், அங்குள்ள பொது அறிவிப்பு ஒலிப்பெருக்கியில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிப் பாடல் ஒலிபரப்பான சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பக்தர்கள் தங்களின் உடமைகள் மற்றும் குழந்தைகளைத் தவறவிடும்போது அதுகுறித்த முக்கிய தகவல்களைத் தெரிவிக்கவும், தெய்வப் பாடல்களை இசைக்கவும் மலைக்கோவில் மற்றும் அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஒலிப்பெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், நேற்று மலைக்கோவிலுக்குச் சென்ற இளைஞர் ஒருவர் அங்கிருந்த ஒலிப்பெருக்கிக் கருவியுடன் தனது செல்போனை ரகசியமாக இணைத்து, திடீரென அரசியல் கட்சிப் பாடலை ஒலிக்கச் செய்ததாகக் கூறப்படுகிறது. புனிதமான ஆன்மிகத் தலத்தில் பக்திப் பாடல்கள் ஒலிக்க வேண்டிய நேரத்தில், திடீரென அரசியல் பாடல் ஒலித்ததால் அங்கிருந்த பக்தர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் திகைப்படைந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்த விரிவான விசாரணைக்குக் கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அந்த அரசியல் பாடல் குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டும் ஒலித்ததா அல்லது அடிவாரம் வரை அனைத்துப் பகுதிகளிலும் கேட்டதா என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இத்தகைய அநாகரிகமான செயலில் ஈடுபட்ட நபரைக் கண்காணிப்புக் கேமரா பதிவுகளின் மூலம் அடையாளம் கண்டு, அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.