திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், தன்னை அரசியலில் இருந்து ஒழித்துக் கட்ட ஒரு கூட்டம் பொய் பரப்புரைகளை மேற்கொண்டு வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

அத்தகைய நபர்களைக் கட்சியில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் ஏற்கனவே நீக்கிவிட்டதாகவும், அவர்கள் தற்போது மற்றவர்களுடன் இணைந்து கொண்டு தன்னைத் தரக்குறைவாகவும் ஏளனமாகவும் பேசி வருவதாக அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

தன்னை மட்டுமின்றி பல ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்ட ஜி.கே.மணியையும் அவர்கள் வசைபாடி வருவதாகக் குறிப்பிட்ட ராமதாஸ், ஒரு குறிப்பிட்ட கூட்டம் திட்டமிட்டுப் பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதாகக் கூறினார்.

உட்கட்சி விவகாரம் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் இரண்டு முறை தங்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய ராமதாஸ், தேர்தல் ஆணையத்தின் சில அதிகாரிகள் ஒருதலைபட்சமாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார். பாதிக்கப்பட்டவர்கள் செய்ய வேண்டிய மேல்முறையீட்டைத் தேர்தல் ஆணையமே டெல்லி உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனுவாகத் தாக்கல் செய்திருப்பது வியப்பளிப்பதாக அவர் தெரிவித்தார்.

தேர்தல் ஆணையம் சரியான திசையில் செல்லவில்லை என்றும், சில கீழ்மட்ட அதிகாரிகள் ஒரு சாராரைக் காப்பாற்றத் துடிப்பதாகவும் அவர் விமர்சித்தார். மேலும் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்துத் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.