தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நெல்லை மேலப்பாளையத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, இஸ்லாமிய மக்களுக்கு எதிராகப் பாரதிய ஜனதா அரசு பல்வேறு இன்னல்களை இழைத்து வருகிறது.
அதனை எதிர்த்து நான் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகிறேன். உணவுச் சுதந்திரத்தில் தலையிடும் வகையில் மாட்டிறைச்சி உண்ணக் கூடாது, விற்பனை செய்யக் கூடாது எனப் பல்வேறு சட்டங்களை பாஜக அரசு கொண்டு வந்தது. ஆனால், உண்மையில் வெளிநாடுகளுக்கு மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்வதே பாஜகவினர்தான்.
நான் என்ன சாப்பிட வேண்டும், என்ன உடை அணிய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை எனக்கு மட்டுமே உள்ளது. டெல்லியில் இருந்து கொண்டு இதற்குப் பிடிவாதம் பிடிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. கொள்கைக்காக மூப்பனார் தொடங்கிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை, ஜிகே வாசன் தற்போது மோடியிடம் அடகு வைத்துவிட்டார். அதேபோல், விஜயகாந்த் உருவாக்கிய தேமுதிகவை அவரது மனைவி பிரேமலதா கூறு போட்டு விற்கத் தயாராகிவிட்டார். ஆனால், அதனை வாங்குவதற்குத்தான் ஆள் இல்லை.
மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் சிஏஏ (குடியுரிமை திருத்தச் சட்டம்) போன்ற சட்டங்களைக் கொண்டு வந்த பாஜகவுடன் கூட்டணி அமைத்து, எடப்பாடி பழனிசாமி தேர்தலைச் சந்திக்கிறார். இது கண்டிக்கத்தக்கது. தமிழ்த் தேசியம் என்ற முழக்கத்தை முன்வைத்து வரும் சீமான், உண்மையில் எல்லோரையும் ஏமாற்றிப் பிழைப்பு நடத்தி வருகிறார். இவ்வாறு நாஞ்சில் சம்பத் பேசினார்.
