ஆக்ரா அருகே உள்ள ஒரு பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த இளம்பெண் ஒருவரின் உடல், எரியும் சிதையில் இருந்து போலீஸாரால் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது ஆக்ராவைச் சேர்ந்த சனா (21) என்ற முஸ்லிம் இளம்பெண், அஜித் சிங் என்ற வாலிபரை காதலித்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார். கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், கடந்த புதன்கிழமை மதியம் 3 மணியளவில் சனாவிற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் முன்பே அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. சனா ‘டிபி’ (TB) நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் அஜித் சிங், சனாவின் மரணத்தை அவரது பெற்றோருக்குத் தெரிவிக்காமல், கிராம மக்களுடன் சேர்ந்து உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று இறுதிச் சடங்குகளைத் தொடங்கினார். சனாவின் உடல் சிதையில் எரியத் தொடங்கிய நேரத்தில், இது குறித்து தகவல் அறிந்த அவரது தந்தை நிஜாம், தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி காவல்துறையினருக்குத் தகவல் அளித்தார்.
உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்த ஃபதேபூர் சிக்ரி போலீஸார், எரியும் சிதையில் தண்ணீரை ஊற்றி அணைத்தனர். பாதி எரிந்த நிலையில் இருந்த சனாவின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக காவல் ஆய்வாளர் ஆனந்த் வீர் சிங் கூறுகையில், “சனாவின் தந்தை நிஜாம் அளித்த புகாரில், அஜித் சிங் தனது மகளைக் கடத்திச் சென்று கட்டாய மதமாற்றம் செய்ததாகவும், நீண்ட காலமாக அவளைத் துன்புறுத்தி வந்ததாகவும் தெரிவித்துள்ளார். கொலையை மறைக்கவே அவசரம் அவசரமாக உடலை எரிக்க முயன்றதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்” என்றார்.
இருப்பினும், அஜித் சிங் இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். சனா நோயினால் தான் உயிரிழந்தார் என்று அவர் கூறி வருகிறார். தற்போது அஜித் சிங்கை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இது கொலையா அல்லது இயற்கை மரணமா என்பது தெரியவரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
