காசியாபாத்தில் 9-ஆவது மாடியில் இருந்து குதித்து 3 சகோதரிகள் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், காவல்துறையினருக்கு மிக முக்கியத் தடயம் கிடைத்துள்ளது. அச்சிறுமிகளின் தந்தை விற்பனை செய்த செல்போனை மீட்டெடுத்துள்ள போலீஸார், அதன் தரவுகளை (Data) ஆய்வு செய்து வருகின்றனர்.

கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி நிஷிகா (16), பிராச்சி (14) மற்றும் பாகி (12) ஆகிய மூன்று சகோதரிகள் தாங்கள் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பின் 9-ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சிறுமிகளின் தந்தை சேத்தன் குமார், இந்தச் சம்பவத்திற்கு 15 நாட்களுக்கு முன்பே வீட்டில் இருந்த ஒரு செல்போனை ரூ.15,000-க்கு விற்பனை செய்திருந்தார். அந்த போனை தற்போது மீட்டெடுத்துள்ள காவல்துறையினர், அதை தடயவியல் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். “ஆன்லைன் கொரியன் கேம்” ஏதேனும் இத்தற்கொலைக்குத் தூண்டுகோலாக இருந்ததா? என்பதை அறிய செல்போன் தரவுகளை மீட்பது அவசியம் என்று துணை ஆணையர் நிமிஷ் பாட்டில் தெரிவித்துள்ளார்.

சிறுமிகளின் அறையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 9 பக்க டைரி, அவர்களது மனநிலையைப் பிரதிபலிக்கிறது. அந்த டைரியில் “நாங்கள் கொரியாவை நேசிக்கிறோம்” என்ற வாசகம் மீண்டும் மீண்டும் இடம்பெற்றுள்ளது. அவர்கள் கொரிய கலாச்சாரம் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாக இருந்தது தெரியவந்துள்ளது.

கொரிய கலாச்சாரத்தை விட்டுவிடச் சொல்லியும், இந்திய முறைப்படி திருமணம் செய்துகொள்ளச் சொல்லியும் குடும்பத்தினர் தங்களுக்கு அழுத்தம் கொடுப்பதாகச் சிறுமிகள் அதில் குற்றம் சாட்டியுள்ளனர்.

தந்தை செல்போனை பறித்துக்கொண்டதால் அவர்கள் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளனர். டைரியின் இறுதியில், “அப்பா எங்களை மன்னித்துவிடுங்கள்… உங்களது அடி மற்றும் சித்திரவதையை விட மரணமே மேலானது” என்று உருக்கமாக எழுதியுள்ளனர்.

தந்தை சேத்தன் குமார் கூறுகையில், தனது மகள்கள் கடந்த 3 ஆண்டுகளாகக் கொரிய ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கிக் கிடந்ததாகவும், அதனால் அவர்கள் பள்ளிக்குக் கூடச் செல்லவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். இருப்பினும், குறிப்பிட்ட அந்த “டாஸ்க்” அடிப்படையிலான செயலி (Task-based App) குறித்து இன்னும் உறுதியான ஆதாரங்கள் கிடைக்கவில்லை.

மீட்கப்பட்ட செல்போன் தரவுகள் மற்றும் டைரி குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, இச்சிறுமிகளின் விபரீத முடிவுக்கு ஆன்லைன் மோகமா அல்லது குடும்பத் தகராறா காரணம் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதற்கிடையில் சேத்தன் குமார் மூன்று சகோதரிகளை திருமணம் செய்து கொண்டு தன்னுடைய நான்கு பெண் குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இவருடன் லிவ்இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஒரு பெண் தற்கொலை செய்த நிலையில் அது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.