கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் தளிப்பரம்பா மார்க்கெட் சாலையில் உள்ள ஒரு செல்போன் கடையில் ஊழியர் ஒருவர் மேசை டிராயரைத் திறந்தபோது, உள்ளே ஒரு குட்டி விரியன் பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்தப் பாம்பு கடையில் வைக்கப்பட்டிருந்த செல்போன் ஸ்கிரீன் கார்டில் உள்ள பசையில் சிக்கி நகர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது.
இதனைப் பார்த்த வாடிக்கையாளர்களும் ஊழியர்களும் உடனடியாக வனத்துறைக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் பாம்பு பிடி வீரர் ஆகியோர் அந்தப் பாம்பை பத்திரமாக மீட்கும் முயற்சியில் இறங்கினர்.
முதலில் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தி பாம்பைப் பிரிக்க முயன்றனர், ஆனால் பசையின் வீரியம் அதிகமாக இருந்ததால் அந்த முயற்சி தோல்வியடைந்தது. இதையடுத்து ஸ்கிரீன் கார்டுடன் சேர்த்து அந்தப் பாம்பை வனத்துறை அலுவலகத்திற்குக் கொண்டு சென்றனர்.
அங்கு நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு பாம்பின் உடலில் எந்தவிதமான காயமும் ஏற்படாத வகையில் மிகவும் கவனமாக பசையிலிருந்து அது விடுவிக்கப்பட்டது. பாதுகாப்பாக மீட்கப்பட்ட அந்த விரியன் பாம்பு பின்னர் அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு போய் விடப்பட்டது. ஒரு சிறிய உயிரைக் காப்பாற்ற வனத்துறையினர் காட்டிய அக்கறையை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.
