மதுரை மாவட்டம் மேலூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜ கண்ணப்பன், தேமுதிக ஒரு கட்சியே இல்லை என்று விமர்சித்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கூட்டணி குறித்துப் பேசிய அவர், விஜயகாந்த் இருந்தபோது தேமுதிக எதிர்க்கட்சியாக இருந்தது, ஆனால் இப்போது அந்தக் கட்சியில் ஆட்கள் இல்லை என்றும், சீட் வேண்டும் என்றால் ஏதேனும் ஒரு கூட்டணியில் உறுதியாக இருக்க வேண்டுமே தவிர இரண்டு பக்கமும் பேசக்கூடாது என்றும் கடுமையாகச் சாடினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோதும், தேமுதிக பற்றி கேட்டதற்கு “அதெல்லாம் ஒரு கட்சியா? பெரிய கட்சியைப் பற்றிப் பேசுங்கள்” என அலட்சியமாகக் கூறிவிட்டுச் சென்றார்.
அதேபோல் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும், இஸ்லாமிய மற்றும் கிறித்தவ வாக்குகளை ஒருங்கிணைக்க அது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனைப் போட்டி உருவாகியுள்ள நிலையில், தேமுதிக மற்றும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் எந்தக் கூட்டணியில் இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதற்கிடையே, தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக வந்த தகவலை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மறுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
