பெங்களூரு என்றாலே டிராபிக் ஜாம் தான் நினைவுக்கு வரும். ஆனால், அந்த டிராபிக் நெருக்கடியிலும் பயணிகளின் மனதை குளிரவைக்கும் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த ரேபிடோ ஆட்டோ டிரைவர் மாதேஷ் (Madesh K), தனது ஆட்டோவை ஒரு நடமாடும் மனிதாபிமான மையமாக மாற்றியுள்ளார்.
இவரது ஆட்டோவில் ஏறும் பயணிகளுக்கு குடிநீர், டிஷ்யூ பேப்பர், ஹேண்ட் சானிடைசர் மற்றும் தின்பண்டங்கள் என அனைத்தும் இலவசமாகவே வழங்கப்படுகின்றன.
இதுமட்டுமில்லாமல், கர்பிணி பெண்களுக்கு 5 கிலோமீட்டர் வரை இலவசமாகவே சவாரி வழங்கி அசத்தி வருகிறார் மாதேஷ். ஆட்டோவின் உள்ளே “எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எல்லாம் இலவசம் – வருகைக்கு நன்றி” என்ற வாசகத்துடன் கூடிய சிறிய போர்டு ஒன்றையும் மாட்டி வைத்துள்ளார்.
இதைப் பார்த்த மென்பொருள் பொறியாளர் உதயா படேல் என்பவர், மாதேஷின் இந்த அமைதியான சேவையை சமூக வலைதளத்தில் பகிர, அது இப்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
“பணம் சம்பாதிப்பதை விட, ஒருவருக்கு உதவுவதே எனக்கு மகிழ்ச்சி” எனச் சொல்லாமல் சொல்லும் மாதேஷின் செயலை ரேபிடோ நிறுவனமும் பாராட்டி கௌரவித்துள்ளது.
“மனிதாபிமானம் இன்னும் சாகவில்லை” என்பதற்கு இந்த பெங்களூரு ஆட்டோ டிரைவரே ஒரு சிறந்த உதாரணம் என நெட்டிசன்கள் லைக்குகளைக் குவித்து வருகின்றனர்.
