ராணிப்பேட்டையில் உள்ள ‘விஸ்வாஸ்’ சிறப்புப் பள்ளியில் பயின்று வரும் ஜாபர் என்ற மாற்றுத்திறனாளி மாணவனின் பிறந்தநாள் விழா சமீபத்தில் உணர்ச்சிகரமான முறையில் கொண்டாடப்பட்டது. கடந்த 25 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் இந்தப் பள்ளியைத் தமிழக அமைச்சர் ஆர். காந்தியின் மனைவி கமலா காந்தி அவர்கள் மிகச் சிறப்பாக நிர்வகித்து வருகிறார்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அமைச்சர் காந்தி, அங்குள்ள குழந்தைகளுடன் தனது நேரத்தைச் செலவிட்டார். விழாவின் ஒரு பகுதியாக, மாணவன் ஜாபரின் தாயார் நூர்ஜகான் மேடையில் பேசுகையில், தனது மகனின் முன்னேற்றத்திற்கும், பள்ளி நிர்வாகம் அளித்து வரும் ஆதரவிற்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில் தாயின் அந்த உருக்கமான பேச்சைக் கேட்ட அமைச்சர் ஆர். காந்தி எதிர்பாராத விதமாகத் நெகிழ்ந்து போய் கண்கலங்கினார். அமைச்சரின் இந்த எதார்த்தமான அன்பும், மனிதநேயமும் அங்கிருந்தோரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியதுடன், சமூக வலைதளங்களிலும் பரவலான பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
