அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கடும் குளிரின் காரணமாக மரங்களில் இருந்து உறைந்த நிலையில் கீழே விழும் இகுவானா எனப்படும் ராட்சத ஓணான்களை, ஒரு நபர் பிடித்து சமைத்து உண்ணும் சம்பவம் இணையதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிரே டேவிஸ் என்ற சமூக வலைதள பிரபலம், இவ்வாறு மயக்க நிலையில் விழும் ஓணான்களைச் சேகரித்து அவற்றை துண்டுகளாக்கி மெக்சிகன் உணவான டகோவாக சமைத்து உண்ணும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
புளோரிடாவில் இகுவானாக்கள் ஒரு ஆக்கிரமிப்பு இனமாகக் கருதப்படுவதாலும், அவற்றின் இறைச்சி கோழிக்கறியைப் போன்ற சுவை கொண்டது என்பதால் அங்குள்ளவர்கள் இதனை மரக்கோழி என்று அழைக்கின்றனர்.
View this post on Instagram
சாதாரணமாக ஓணான்கள் குளிர் காலத்தில் தசை கட்டுப்பாட்டை இழந்து மரங்களில் இருந்து கீழே விழுந்தாலும், அவை இறப்பதில்லை; வெப்பம் அதிகரித்தால் மீண்டும் உயிர் பெற்றுவிடும். ஆனால், கிரே டேவிஸ் அந்த ஓணான்களைக் கொன்று உணவாக்குவதுடன், ஒரு ஓணானின் வயிற்றுக்குள் இருந்த இருபது முட்டைகளையும் சமைத்து உண்டுள்ளார்.
இதன் மூலம் அந்த உயிரினத்தின் பெருக்கத்தைத் தான் கட்டுப்படுத்துவதாகவும், ஓணானின் தோலைப் பதப்படுத்தி வைப்பதன் மூலம் கழிவுகள் சேர்வதைத் தடுப்பதாகவும் அவர் வினோதமான விளக்கம் அளித்துள்ளார். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதாகக் கூறி இவர் செய்யும் இந்தச் செயல் விலங்கு ஆர்வலர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
