சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றுப் பேசினார். அப்போது பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸைச் சுற்றி சில துரோகிகள் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அதில் மிக முக்கியமானவர் ஜி.கே.மணி என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

கட்சியின் உட்கட்சிப் பூசல் தொடர்பாக நீதிமன்றத்தில் தங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வந்துள்ள நிலையிலும், அதனை ராமதாஸிடம் தவறாகச் சித்தரித்து சிலர் குழப்பத்தை விளைவித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அன்புமணி ராமதாஸ், ராமதாஸைச் சுற்றி இருப்பவர்கள் அவருக்குத் தவறான தகவல்களை வழங்கி அவரது மனதை மாற்ற முயற்சிப்பதாகச் சாடினார். குறிப்பாக ஜி.கே.மணி கட்சியில் பல துரோகங்களைச் செய்துள்ளதாகவும், பொதுக்குழுக் கூட்டத்தில் பேசுவதற்கு அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை என்றும் ஆவேசமாகப் பேசினார்.

இந்தச் சம்பவம் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.