உத்தரப் பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில், காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறுவதற்காக இளம்பெண் ஒருவர் செய்த ‘நாகினி’ நாடகம், போலீஸாரையும் கிராம மக்களையும் ஒரு நிமிடம் நிலைகுலையச் செய்துள்ளது.

அதாவது , நேற்று காலை ஒரு இளம்பெண்ணின் அறைக்கதவைத் திறந்த பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்தனர். அறைக்குள் இளம்பெண்ணைக் காணவில்லை. ஆனால், அவர் படுத்திருந்த படுக்கையில் துணிகளுக்கு இடையே பாம்புச் சட்டை ஒன்று கிடந்தது.

இந்தச் செய்தி காட்டுத்தீ போலக் கிராமம் முழுவதும் பரவியது. காணாமல் போன இளம்பெண் ஏதோ ஒரு மர்மமான காரணத்தால் ‘நாகினி’யாக மாறிவிட்டதாக மக்கள் பேசத் தொடங்கினர். சிலர் இதனைத் தெய்வக் குற்றம் என்றும், சிலர் அதிசயம் என்றும் கூறி வதந்திகளைக் கிளப்பினர். இதனால் கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்படவே, போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ‘நாகினி’ கதையின் பின்னணியில் இருந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்தது: அந்த இளம்பெண்ணுக்கும் அதே ஊரைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கும் இடையே காதல் இருந்து வந்துள்ளது.  வீட்டிலிருந்து வெளியேறும்போது தன்னை யாரும் தேடக்கூடாது என்பதற்காகவும், திசைதிருப்பவும் முன்கூட்டியே திட்டமிட்டு பாம்புச் சட்டையைத் தேடி எடுத்து வந்து படுக்கையில் போட்டுவிட்டுச் சென்றுள்ளார்.

இதுகுறித்துத் தகவல் தெரிவித்த காவல் ஆய்வாளர் அஜய் குமார், “இது முற்றிலும் ஒரு சினிமா பாணி நாடகம். காதலனுடன் செல்வதற்காக அந்தப் பெண் இத்தகைய விசித்திரமான திட்டத்தைத் தீட்டியுள்ளார். அந்தப் பெண்ணின் செல்போன் சிக்னலை வைத்து அவர் இருக்கும் இடத்தைக் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

மேலும் இப்போதைக்குக் குடும்பத்தினர் தரப்பில் எழுத்துப்பூர்வமாகப் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை என்றாலும், அந்தப் பெண்ணை விரைவில் மீட்கப் போவதாகப் போலீஸார் உறுதி அளித்துள்ளனர்.