பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சல்மான் மிர்சா, ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடங்குவதற்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில் அந்தப் பேட்டியாளர், “இந்தியாவின் அதிரடி வீரர் அபிஷேக் சர்மாவை உங்களால் அவுட் ஆக்க முடியுமா?” என்று கேட்டதற்கு, “அபிஷேக் சர்மாவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய அணியையும் ஆல்-அவுட் செய்வதே என் திட்டம்” என்று மிகவும் ஆக்ரோஷமாகப் பதிலளித்தார். மேலும், தனது வியூகங்களை மைதானத்தில் தான் காட்டுவேன் என்றும் சவால் விட்டிருந்தார். ஆனால், பாகிஸ்தான் அணி ஆரம்பத்தில் இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்தபோது, “இந்தச் சவடால் எங்கே போனது?” என்று ரசிகர்கள் கிண்டல் செய்யத் தொடங்கினர்.

​குறிப்பாக, இந்திய வீரர் அபிஷேக் சர்மா கடந்த 2025 ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராகப் புரிந்த சாதனைகளைச் சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் சல்மான் மிர்சாவை வறுத்தெடுத்து வருகின்றனர். 24 பந்துகளில் அரைசதம் கடந்து யுவராஜ் சிங்கின் சாதனையை முறியடித்தது, ஷாஹீன் அப்ரிடியின் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தது என அபிஷேக்கின் ‘ருத்ரதாண்டவத்தை’ ரசிகர்கள் நினைவுபடுத்தி வருகின்றனர். “முதலில் உனக்கு இந்தியாவிற்கு எதிரான போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்குமா என்று பார், அதன் பிறகு அபிஷேக் சர்மாவைப் பற்றிப் பேசலாம்” என்று காரசாரமான கமெண்ட்கள் பறக்கின்றன. சல்மான் மிர்சாவின் இந்த ‘வாய் சவடால்’ தற்போது அவருக்கு ஒரு பெரிய தலைவலியாக மாறியுள்ளது.