2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாட்டாளி மக்கள் கட்சி தனது இளைஞரணிப் படையைத் தயார் செய்யும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதன் முக்கிய அங்கமாக, சென்னை ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகிலுள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் இன்று (பிப்ரவரி 10, செவ்வாய்க்கிழமை) காலை 10.00 மணிக்கு பிரம்மாண்டமான இளைஞரணி பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்திற்கு இளைஞரணித் தலைவர் முனைவர் கணேஷ்குமார் தலைமை தாங்குகிறார். பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் நேரில் கலந்து கொண்டு, 2026 தேர்தல் வியூகங்கள் மற்றும் இளைஞரணியின் ஆண்டு செயல்திட்டம் குறித்து சிறப்புரையாற்றவுள்ளார்.
தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இந்த சங்கமத்தில் பங்கேற்க உள்ளனர். “2026-ல் பா.ம.க. அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சிதான் அமையும்” என்று அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே பல மேடைகளில் முழங்கி வரும் நிலையில், இன்றைய கூட்டத்தில் அதனை நோக்கிய அடுத்தகட்டப் பணிகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராயப்பேட்டை பகுதியில் ஆயிரக்கணக்கானோர் திரளுவதால், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அன்புமணி ராமதாஸின் அதிரடிப் பேச்சு இன்று அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதங்களைக் கிளப்பும் எனத் தெரிகிறது.
