பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ஹஸ்புரா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட தலித் குடியிருப்பில், கடந்த ஜனவரி 29-ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 10 முதல் 14 வயதுக்குட்பட்ட ஐந்து சிறுமிகள், ஒரு விளைநிலத்தில் ஒன்றாகச் சேர்ந்து விஷம் குடித்ததாகக் கூறப்படுகிறது. இதில் நான்கு சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிர் தப்பிய ஒரு சிறுமி அளித்த வாக்குமூலத்தின்படி, தங்களுக்குத் தெரிந்த சிறுவர்களுடன் பேசிக் கொண்டிருந்ததற்காகக் குடும்பத்தினர் திட்டியதால், விரக்தியடைந்த சிறுமிகள் அனைவரும் சேர்ந்து இந்த விபரீத முடிவை எடுத்ததாகத் தெரியவந்துள்ளது.

​இந்தச் சம்பவத்தில் மிகவும் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், நான்கு சிறுமிகளின் உடல்களும் விபரம் வெளியே தெரிவதற்கு முன்பே அன்றைய தினமே தகனம் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் காவல்துறைக்கு இந்தத் தகவல் எட்டியுள்ளது. “உயிர் தப்பிய சிறுமியின் வாக்குமூலத்தை வைத்து மட்டுமே தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது, இதில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து ஆதாரங்கள் இன்னும் கிடைக்கவில்லை” என மாவட்ட எஸ்பி அம்ப்ரிஷ் ராகுல் தெரிவித்துள்ளார். சிறுமிகள் விளையாடச் சென்ற இடத்தில் பிணமாகக் கிடந்ததைக் கண்டு கிராமத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.