பெங்களூரு அருகே நெலமங்களா பகுதியில் ஒரே நாளில் கணவன் மற்றும் மனைவி அடுத்தடுத்து உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. டிரைவராகப் பணியாற்றி வந்த 48 வயது ராஜு, தனது வீட்டில் குளிப்பதற்காக ‘கேஸ் கீசரை’ பயன்படுத்தியுள்ளார்.
அப்போது அதிலிருந்து கசிந்த நச்சு வாயுவை சுவாசித்ததால், அவர் குளியலறையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
இந்த அதிர்ச்சியான செய்தியை மகன் மூலம் கேட்டறிந்த அவரது மனைவி மீனா, கணவர் இல்லாத உலகில் ஒரு நிமிடம் கூட வாழ விரும்பவில்லை என உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு, தங்களது புதிய வீட்டின் முன்பு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த 20 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வந்த இந்தத் தம்பதியினர், மிகுந்த சிரமத்திற்கு இடையே சொந்தமாக ஒரு வீட்டைக் கட்டி வந்தனர். வங்கியொன்றில் பணியாற்றி வந்த மீனா, தனது தற்கொலை கடிதத்தில் “கணவர் இல்லாமல் என்னால் வாழ முடியாது, என்னை மன்னித்து விடுங்கள்” என்று குறிப்பிட்டதோடு, யாருக்கெல்லாம் பணம் கொடுக்க வேண்டுமோ அதைக் கொடுத்துவிடுமாறு தனது மகனுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ஒரே நாளில் தாய், தந்தை இருவரையும் இழந்து நிற்கும் 19 வயது மகனின் நிலை அந்தப் பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கேஸ் கீசர் பயன்படுத்தும்போது போதிய காற்றோட்டம் இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வின் அவசியத்தை இந்தச் சம்பவம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
