உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் வியக்கத்தக்க தனித்தன்மைகளைக் கொண்டுள்ளன. அந்த வகையில், ‘கடல் அட்டைகள்’ தங்களின் வினோதமான இனப்பெருக்க முறையால் அனைவரையும் ஆச்சரியப்படுத்துகின்றன.

இவை இனப்பெருக்கம் செய்தவுடன் தங்களின் ஆண் உறுப்பைத் தாங்களாகவே துண்டித்துக் கொள்கின்றன. ஆனால், அடுத்த 24 மணி நேரத்திற்குள்ளேயே அந்த உறுப்பு மீண்டும் வளர்ந்து விடுவதுதான் இதில் உள்ள மிகப்பெரிய அதிசயம்.

சுழல் வடிவில் இருக்கும் இந்த உறுப்பு, பழையது போனவுடன் புதியதாக வளர்ந்து அடுத்த முறை இனப்பெருக்கம் செய்யத் தயாராகிவிடுகிறது.

இந்த வினோதமான செயலுக்குப் பின்னால் ஒரு அறிவியல் காரணமும் உள்ளது. கடல் அட்டைகளின் உறுப்புகளில் சிறிய முட்கள் போன்ற அமைப்பு இருக்கும். இவை மற்ற கடல் அட்டைகளின் விந்தணுக்களை அகற்றுவதற்கு உதவுகின்றன.

அப்படிச் செய்யும்போது மற்ற விந்தணுக்களில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்கவே, இவை பழைய உறுப்பைத் துண்டித்துவிட்டுப் புதிய உறுப்பை வளர்த்துக் கொள்கின்றன.

ஒரு கடல் அட்டையால் இப்படித் தொடர்ந்து மூன்று முறை வரை தன் உறுப்பை மீண்டும் வளர்க்க முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கடல் அட்டைகள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், அவை பல தற்காப்புத் திறன்களைக் கொண்டுள்ளன. இவை நச்சுத்தன்மை கொண்ட கடற்பஞ்சுகளை உணவாக உட்கொள்வதன் மூலம் தங்களின் உடலில் விஷத்தன்மையைச் சேர்த்துக் கொள்கின்றன.

இதன் மூலம் மற்ற விலங்குகளிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்கின்றன. சில வகை கடல் அட்டைகள் ஆல்காக்களைச் சாப்பிட்டு, அவற்றிலிருந்து கிடைக்கும் ஆற்றலை வைத்து சூரிய ஒளியின் மூலம் (ஒளிச்சேர்க்கை) உணவு தயாரிக்கும் அபூர்வ சக்தியையும் பெற்றுள்ளன.