திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் இ.பெரியசாமி, தமிழக அரசு நிர்வாகத் திறமையுடன் செயல்படுவதாகக் குறிப்பிட்டார். டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு தாமதமாவதை நிர்வாகத் தோல்வி என்று சொல்வதை ஏற்க முடியாது என்றும், சிறந்த நிர்வாகத்திற்காக மத்திய அரசிடமே தமிழகம் பாராட்டுப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், காங்கிரஸ் உடனான கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் எம்.பி.யின் தொடர் கருத்துகளுக்குப் பதில் அளித்த அவர், கட்சித் தலைவர்கள் சொன்னால் மட்டுமே தாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

அ.தி.மு.க. அரசு விட்டுச் சென்ற 5.5 லட்சம் கோடி ரூபாய் கடனுக்காகத் தற்போது பெரும் தொகையை வட்டியாகச் செலுத்த வேண்டியுள்ளது என்று எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு அவர் பதிலடி கொடுத்தார்.

குறிப்பாக, கடந்த அ.தி.மு.க ஆட்சியில் சுமார் 9 லட்சம் பேரின் முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டதாகவும், தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தற்போது திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் பேருக்கு மீண்டும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.