புனே மாநகரின் காத்ராஜ் பகுதியில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 20 வயது இளம்பெண் ஒருவரை பாரதி வித்யாபீடம் போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாதிக்கப்பட்ட சிறுமி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, அந்த இளம்பெண் சிறுமியின் உடலில் தவறான முறையில் கைவைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து சிறுமி தனது தாயிடம் உடனடியாகத் தெரிவித்த நிலையில், ஆரம்பத்தில் சிறுமியின் தாய் அந்த இளம்பெண்ணை அழைத்து எச்சரித்துள்ளார். இருப்பினும் அந்த இளம்பெண் தொடர்ந்து அந்த சிறுமிக்கு தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தத் தொடர் தொல்லைகளால் மனவேதனையடைந்த சிறுமியின் குடும்பத்தினர், கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் பாரதி வித்யாபீடம் போலீசார் சம்பந்தப்பட்ட இளம்பெண் மீது பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமி ஆகிய இருவரும் ஏற்கனவே ஒருவருக்கு ஒருவர் அறிமுகமானவர்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் அந்த இளம்பெண்ணை காவலில் எடுத்துத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.