மும்பையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் ஐந்தாவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து அணியை எதிர்த்துப் போராடிய நேபாள அணி, கடைசி நேரத்தில் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைத் தவறவிட்டது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 184 ரன்களைக் குவித்தது. அந்த அணியின் பெத்தேல் மற்றும் ஹாரி புரூக் ஆகியோர் அரைசதம் கடந்து வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். கடினமான இலக்கை நோக்கித் துணிச்சலுடன் ஆடிய நேபாள வீரர்கள், ஆட்டத்தின் கடைசி ஓவர் வரை இங்கிலாந்து அணிக்குக் கடும் நெருக்கடி கொடுத்தனர்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சாம் கர்ரன் வீசிய துல்லியமான பந்துவீச்சால் அந்த அணியால் 5 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. நேபாள அணியின் இந்த வீரமிக்க போராட்டத்தைப் பாராட்டிய இங்கிலாந்து கேப்டன் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்களுக்கு நன்றி தெரிவித்த நேபாள கேப்டன் ரோகித் பவுடல், தோல்வி அடைந்தாலும் தனது வீரர்களின் அபாரமான ஆட்டம் குறித்துப் பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்தார்.

உலகக் கோப்பைத் தொடரில் வெறும் பங்கேற்பாளராக இருக்கத் தாங்கள் வரவில்லை என்றும், எத்தகைய பலமான அணியையும் வீழ்த்தும் தன்னம்பிக்கையுடனேயே களமிறங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என அனைத்துத் துறைகளிலும் நேபாள வீரர்கள் தங்களின் முழுத் திறமையையும் வெளிப்படுத்தியதாகக் கூறிய அவர், இந்த ஆட்டம் நேபாள ரசிகர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.