ஐடி துறையில் செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால் வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்ற அச்சம் நிலவி வரும் சூழலில், இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம் ஊழியர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை பாதிக்கப்படும் என்ற கவலை தேவையற்றது என்று நாஸ்காம் தெரிவித்துள்ளது. இப்புதிய தொழில்நுட்பம் ஐடி துறையின் செயல்பாடுகளை முடக்குவதற்குப் பதிலாக, பணிகளை மேலும் ஒழுங்குபடுத்தி ஊழியர்களின் செயல்திறனை மேம்படுத்தவே உதவும் என்று அந்த அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் கிளாட் கோவர்க் போன்ற நவீன கருவிகள் பல பணிகளைத் தானியங்கி முறையில் செய்தாலும், அவை இந்திய ஐடி சேவைகளுக்கு மாற்றாக அமையாது என்று நாஸ்காம் உறுதிபடக் கூறியுள்ளது. உலகளாவிய சிக்கலான தொழில்நுட்பச் சூழலில் இயங்கி வரும் இந்திய ஐடி நிறுவனங்கள், கால மாற்றத்திற்கு ஏற்ப தங்களைத் தாங்களே மறுசீரமைக்கும் பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டதாக நாஸ்காம் சுட்டிக்காட்டியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு கருவிகள் நிறுவனங்களின் பணிகளை எளிதாக்கி அவற்றின் திறனை வலுப்படுத்துமே தவிர, ஐடி துறையைச் சீர்குலைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் உள்ள பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் வேளையில், இந்திய ஐடி துறை ஊழியர்களின் வேலைகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்ற நாஸ்காம் அமைப்பின் இந்த அறிக்கை தகவல் தொழில்நுட்பத் துறையினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.