தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், சென்னை பம்மலில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், தனது குடும்பத்திற்கு எம்.எல்.ஏ, எம்.பி பதவிகளோ அல்லது மத்திய அமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசையோ இல்லை என்று தெரிவித்துள்ளார்.

கட்சிக்காக உண்மையாக உழைக்கும் தொண்டர்கள் சட்டமன்றத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் செல்ல வேண்டும் என்பதே தங்கள் விருப்பம் என்றும் அவர் குறிப்பிட்டார். தேமுதிக எதற்காகத் தொடங்கப்பட்டதோ, அந்த இலக்கை அடைய அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்றும் அவர் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தேமுதிகவின் கூட்டணி குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இது குறித்துப் பேசிய விஜய பிரபாகரன், “சத்திரியனாக மட்டும் இல்லாமல் காலத்திற்கு ஏற்ப சாணக்கியனாகவும் மாற வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

கூட்டணி தொடர்பான நல்ல முடிவை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விரைவில் அறிவிப்பார் என்றும், அதுவரை தொண்டர்கள் பொறுமையாக இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுடனும் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படும் நிலையில், விஜய பிரபாகரனின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.