தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கட்சிகள் கூட்டணி மற்றும் பிரசார வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் அதிமுகவை ‘ஊழல் கட்சி’ என்று விமர்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்குப் பதிலடியாக அதிமுக நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் விஜய்க்கு எதிராகத் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த மோதலின் தொடர்ச்சியாக, இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விஜயை ‘ஊழல்வாதி’ என்று நேரடியாகத் தாக்கிப் பேசினார். விஜய் வரி ஏய்ப்பு செய்ததே அவர் ஊழல்வாதி என்பதற்குச் சாட்சி என்றும், இதனை நீதிமன்றமே தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், கட்சி ஆரம்பித்த பிறகு விஜய் மக்களைச் சந்திக்க வெளியே வருவதில்லை என்றும், கரூர் சம்பவத்திற்குப் பிறகு சுமார் 72 நாட்கள் அவர் முடங்கிக் கிடந்ததாகவும், எந்தவொரு உண்மையான அரசியல் தலைவரும் இப்படி இருக்க மாட்டார்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.
விஜய் மீதான இந்த விமர்சனங்களுக்குப் பின்னணியாக 2022-ம் ஆண்டு நடந்த வருமான வரி விவகாரம் பார்க்கப்படுகிறது. ‘புலி’ படத்திற்காகப் பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை விஜய் கணக்கில் காட்டவில்லை என்றும், அதற்காக அவருக்கு 1.50 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் வருமான வரித்துறை தெரிவித்திருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து விஜய் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த விவகாரத்தை முன்வைத்து அதிமுக தனது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது.
