விருதுநகர் கல்குறிச்சியில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லட்சக்கணக்கான இளைஞர்கள் மத்தியில் எழுச்சியுரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழகத்திற்குச் சேர வேண்டிய கல்வி நிதி, மெட்ரோ ரயில் நிதி, நீட் விலக்கு மற்றும் மதுரை எய்ம்ஸ் போன்ற நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவதாகக் குற்றம் சாட்டினார்.
தமிழகத்திற்கு பட்ஜெட்டில் “ஜீரோ” மதிப்பெண் வழங்கிய மத்திய அரசுக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்களும் “பூஜ்ஜியம்” தான் கொடுக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த முதல்வர், அவர் இப்போது முழுமையாக ‘என்.டி.ஏ. பழனிசாமியாக’ மாறிவிட்டதாகக் கிண்டல் செய்தார். “நானும் ரவுடிதான்” என்று படத்தில் சொல்வது போல, தான்தான் கூட்டணிக்குத் தலைமை என்று எடப்பாடி பழனிசாமி புலம்பி வருவதாகவும், தமிழக உரிமைகளைப் பறிக்கும் மத்திய அரசை எதிர்க்காமல் பாஜகவின் கிளைச் செயலாளர் போல அவர் செயல்படுவதாகவும் சாடினார்.
மேலும், 100 நாள் வேலைத் திட்டத்தில் இருக்கும் சிக்கல்களைப் புரிந்து கொள்ளாமல், ஓனரை மிஞ்சிய லேபராக எடப்பாடி பழனிசாமி பேசி வருவதாகக் குறிப்பிட்டார்.
தனக்கு பதவி கொடுத்த சசிகலாவையே கட்சியை விட்டு நீக்கியவர் பழனிசாமி என்று சுட்டிக்காட்டிய முதல்வர், அதிமுக மற்றும் பாஜக கூட்டணி மக்கள் நலனுக்காக அமையவில்லை, அது ஒரு மியூசிக்கல் சேர் விளையாட்டு என்று விமர்சித்தார்.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் எதிரணிகளுக்கு இதுவரை இல்லாத அளவு படுதோல்வியைப் பரிசாக அளிக்க வேண்டும் என்றும், திமுகவின் மூத்த பிள்ளையான இளைஞரணி ஒற்றுமையுடன் உழைத்து மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்றும் அவர் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
