இந்திய ரயில்வேயில் தற்போது ஒரு ரயில் மணிக்கு சராசரியாக 55 கி.மீ வேகத்தில் சென்றாலே அது ‘சூப்பர்ஃபாஸ்ட்’ (Superfast) ரயிலாக வகைப்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த வேக அளவுகோல் இன்றைய காலத்திற்கு மிகவும் குறைவானது என்றும், இதனை மாற்றியமைக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர் கே.சி.வேணுகோபால் தலைமையிலான நாடாளுமன்றக் பொதுக் கணக்குக் குழு (PAC) அதிரடியாகப் பரிந்துரை செய்துள்ளது.
2007-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட இந்த 55 கி.மீ வேகம் என்பது தற்போதைய நவீன தொழில்நுட்பக் காலத்தில் பழமையானது (Anachronistic) என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் ரயில்கள் மிக அதிவேகத்தில் இயங்கும் நிலையில், இந்தியாவில் 55 கி.மீ வேகத்தை ஒரு மைல்கல்லாக வைத்திருப்பது பயணிகளை ஏமாற்றும் செயல் என்று குழு அதிருப்தி தெரிவித்துள்ளது.
குறிப்பாக, தற்போது இயக்கப்படும் 478 சூப்பர்ஃபாஸ்ட் ரயில்களில், சுமார் 123 ரயில்கள் (அதாவது 25 சதவீதம்) நிர்ணயிக்கப்பட்ட 55 கி.மீ வேகத்தைக் கூட எட்டவில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ரயில்கள் மெதுவாகச் சென்றாலும், ‘சூப்பர்ஃபாஸ்ட்’ என்ற பெயரில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை இந்த அறிக்கை கடுமையாகக் கண்டித்துள்ளது.
ஒரு ரயிலின் வேகம் குறைந்தால் உடனடியாக அதன் சூப்பர்ஃபாஸ்ட் அந்தஸ்தை நீக்கிவிட்டு, சாதாரண கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், 2030-ம் ஆண்டுக்குள் ரயில்களின் சராசரி வேகத்தை மணிக்கு 100 கி.மீ-ஆக உயர்த்த வேண்டும் என்றும், பயண நேரம் முழுவதும் இந்த வேகத்தைச் சீராகப் பராமரிக்க ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும் ரயில்வே அமைச்சகத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
